எங்களின் பணிகள்

எங்களின் தலையாய பணிகள்


உழவாரப்பணி (இறைத்தொண்டு)

மக்கள் அனைவருக்கும் வணக்கம். அக்கால கட்டத்தில் கட்டப்பட்ட பழங்கால கோயில்கள் காலத்தாலும் இயற்கை சீற்றத்தாலும் இன்று பெருமளவு சேதமடைந்து வருகிறது. அவற்றை அழிவிலிருந்து பாதுகாத்து புத்துயிர் பெறச்செய்வதே எங்களின் நோக்கம். எங்கள் குழுவோடு நேரம் கிடைக்கும் பொழுது அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று உழவாரப்பணிகளை மேற்கொள்வோம். இதன் மூலம் எங்களால் இயன்ற தொண்டினைச் செய்து வருகிறோம். எங்களின் நோக்கம் ஒன்றுதான். ஏதாவது ஒரு வகையில் கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினருக்கு நமது மதத்தின் மீதுள்ள நம்பிக்கையும் அக்கறையும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான முக்கிய காரணம், நமது மதத்தின் புரிதல் இல்லாததுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதத்தைப் பற்றி போதிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார்கள். ஆனால், கவலைக்குரிய செய்தி என்னவென்றால் பெற்றோர்களே அதை அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான். இந்து மதத்தில் உள்ள பலரும் இன்று பிற மதங்களுக்கு மாறுவதற்கு முக்கிய காரணமே இந்து மதத்தை முழுமையாக அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான். உலகிலேயே முதன்முதலில் தோன்றிய மதமே நம் இந்து மதம்தான். அப்பழம்பெரும் மதம் அழிவதைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாத எங்களின் ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகரச் சீறலே இவ்வாறு மாறியது. நம் மதத்தை பாதுகாக்க தங்களின் பேராதரவு இல்லாமல் எதுவும் செய்ய இயலாது.

எண்ணெய் தானம்

இருளடைந்த கோயில்களில் வெளிச்சத்தை கொண்டு வருவதே எங்களின் மற்றொரு நோக்கம். தற்பொழுது நாங்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று கோயில்களுக்கு தேவையான எண்ணையை வழங்கி வருகிறோம். இதுபோல் தாங்களும் தங்களால் இயன்ற பொருள்களை கோயில்களுக்கு வழங்கலாம்.

ஊக்குவிப்புப் பேச்சு

இளம் தலைமுறையினருக்கு நற் பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டியது நம் தலைமுறையினரின் பொறுப்பு. மாணவர்களே சுதந்திர பாரத இந்தியாவின் வருங்கால தூண்கள். சில மாணவர்கள் தங்களின் தாய் தந்தையரை இளம் வயதிலேயே இழந்து விடுகின்றனர். சிலர் தங்களின் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சிலர் குசேலனைப் போன்று வறுமையில் வாடுபவர்கள். அவர்கள் குசேலனும் குபேரானானதை அறிவதில்லை. இவர்கள் அனைவரும் தங்களின் சூழ்நிலையால் சரசுவதி தேவி அருளிய பொன்னான படிப்பினை அறிய இயலாதவராகி விடுகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர். இதுபோன்ற காரணங்களே அவர்கள் சமூகத்தில் தவறு செய்ய காரணமாகி விடுகின்றது. அவற்றை தடுப்பது நமது கடமையல்லவா. இதற்காக நாங்கள் ஊக்குவிப்பு பேச்சு கொடுக்கின்றோம். இதன் மூலமாக சில மாணவர்களின் மனதிலாவது தன்னம்பிக்கை ஊற்றெடுக்குமென்றால் அது நாங்கள் செய்த பெரும் பாக்கியம்.

சீருடைச் சேவை

மக்கள் சேவையே மகேசன் சேவை என்றும் குழந்தைகளிடத்தில் இறைவனை காணலாம் என்றும் ஆன்றோர்கள் கூறுவார்கள். அதற்கிணங்க ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான சீருடைகளை வழங்கி சேவை செய்து வருகிறோம். இதன் மூலமாக அவர்களின் முகத்தில் முத்துச் சிரிப்புகளை காண ஆவல் கொண்டோம். தாங்களும் இந்த பொற்காரியத்தில் இணைய வேண்டும் என்று விரும்புகின்றோம். எங்களுடன் தங்கள் சேவைகளைத் துவங்க karuvarai.in@gmail.com க்கு mail செய்யவும்.